கல்விக் கண் திறந்தவர் என்றும் கிங் மேக்கர் என்றும் பெருந்தலைவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு 1903 ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த அவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையும் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளி படிப்பையும் இழந்தார். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணித்தார்.
காமராஜர் பள்ளி படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக 9 ஆண்டுகள் காமராஜர் சிறையிலிருந்தார். 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலராகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், 1947இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், 1949இல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் செயல்பட்டவர்.
1941ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946இல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1952இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1954 முதல் 1963வரை தமிழக முதல்வராகவும், 1969 மற்றும் 1971இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய வங்கு வகித்தவர் காமராஜர். அதனால் அவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டு, 1972ல் தாமிர பத்திர விருதும், 1976ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் உயிரிழந்தார்.