கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க..! வயதான தம்பதிகள் வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காயலான் கடை நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் காவல்துறை தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காயலான் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவல்துறை ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமூல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமூல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமூல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலைமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.