அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு வெறும் காய்ச்சல், தலை வலிக்கு சென்றால் கூட 4 ஆயிரம் வரைக்கு செலவு செய்யும் கட்டாயம், ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை என இலங்கையில் தற்போது உள்ள நிலை நீடித்தால் இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அகதிகளாக மார்ச் 22 முதல் முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
மேலும், இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் இன, மத, மொழி பேதம் காட்டி மக்களை பிரித்து வைத்ததால் கடந்த பல வாரங்களாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சுமார் 10 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் மீது ஏறிய மாணவர்கள் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை அதன் மீது கட்டி வைத்தனர். மேலும் வீட்டின் நுழைவு வாயிலில் கறுப்புத் துணிகளைத் தொங்க விட்டதுடன், சுற்றுச் சுவர் மீது அரசுக்கும், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எதிரான வாசகங்களை எழுதினர்.
இலங்கையில் கடந்த பல வாரங்களாக எரிவாயு சிலிண்டர் 1- கிட்டத்தட்ட ரூ 4,500, பெட்ரோல் ஒரு லிட்டர் கிட்டத்தட்டரூ 400, பால் மாவு ஒரு கிலோ கிட்டத்தட்டரூ 2,000, கோதுமை மாவு ஒரு கிலோ கிட்டத்தட்டரூ 200, தக்காளி ஒரு கிலோ கிட்டத்தட்டரூ 350, பூண்டு ஒரு கிலோ கிட்டத்தட்டரூ 450, என இலங்கையில் கடந்த பல வாரங்களாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டுமல்லாது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
என்ற வள்ளுவரின் வரிகளுக்கு இணங்க கி.பி. 9 ம் நூற்றாண்டில் உருவான “சீவக சிந்தாமணி”யில் “இட்ட எள் விழ இடமில்லா தவாறு குறைவற்ற 18 மொழி பேசும் மக்களும் திரண்டு வந்து நகரில் நிறைந்திருப்பர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்ட 18 மொழிகளில் சீன மொழியும் அடங்கும். மேலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்நூலுக்கு மயிலைநாதன் எழுதிய உரையில்,
“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துருக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம்
சுங்கம் மதகம் கவுடம் கடாரம் கடுங்குலசம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமினவையே.”
என்று நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இந்த பூமியில் தமிழனின் கால் பாதம் பதியாத இடம் ஒன்று உள்ளதோ..? என உரைக்கும் அளவிற்கு பண்டைய தமிழன் பறந்து விரிந்து வாழ்ந்து வந்துள்ளான் . தமிழனின் போதாக்குறை இரண்டாம் உலக போருக்கு பின்னர் கிழக்கிந்திய கம்பெனிகள் பலநாடுகளை விட்டு வெளியே சென்றாலும் அவர்கள் விட்டு சென்ற மொழி, கலாசாரம், பண்பாடு இன்றும் அவர்களை ஆட்டிப்படைத்து கொண்டுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் கயவர்கள் பல வழிகளில் கிடைத்ததை வாரி சுருட்டி கொள்ள நாட்டை ஆண்டோரும், நாளோரும் தன் முப்பாட்டனைப் போல நீதி, நேர்மை, தர்ம நியாயங்களை பேசிக்கொண்டு நடை பிணங்களாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக ஊழல் பெருச்சாளிகள் இடம் பல நாடுகள் சிக்கி தவிக்க ஆட்சியாளர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமான நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இயற்கை வளங்களையும் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்து வருகின்றனர்.
பண்டைய காலத்தில் எவையெல்லாம் தேச துரோகங்களாக கருத பட்டதோ அதையெல்லாம் இன்று செய்து பொன்னும் பொருளும் ஈட்டி நீதி, நேர்மை, தர்ம நியாயங்களை பேசிக் கொண்டுள்ள அப்பாவி மக்களின் அறியாமையை ( வறுமையை ) பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்டு அவர்கள் ஆடும் ஆட்டம் சொல்லில் அடங்காதது.
ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியை காப்பாற்றி கொள்ள மக்களை மொழி, இனம், கலாசாரம் என பிரித்து மக்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி பல ஆண்டுகளாக வாழ்ந்த நாட்டை விட்டு உயிர் பிழைக்க தன் சொத்து சுகங்களை விடுத்து, உற்றார் உறவினர்களை துறந்து பஞ்ச பரதேசிகளாக பல நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க செல்வது பல ஆண்டுகளாகவே தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டுள்ளது.
இத்தகைய கொடுங்கோலர்கள் தன்னை நம்பிய மக்களுக்காவது நல்லது செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை? நல்லோர், அறிவாளிகள், உழைப்பாளிகள் நாட்டில் இருந்தால் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்பார்கள். ஆகையால் தன்னை சுற்றியும் முட்டாள் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஜாதி, மொழி, இனம் என மக்களை பிளவு படுத்தி நல்லோர், அறிவாளிகள், உழைப்பாளிகள் நாட்டை விட்டு விரட்டி அடித்து விட்டு நாட்டை ஆட்சி செய்யும் கொடுங்கோலர்கள் பின்னர் நாட்டில் கிடைத்ததை வாரி சுருட்டி கொண்டதன் விளைவு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு இதன்விளைவாக பட்டினி சாவை தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் .
1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்நாள் முதல் சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்குச் சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்ற முறையில் கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமின்றி இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்று இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையோரை 1950 களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இதுமட்டுமல்லாமல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்களில் கண் மூடித்தனமாக குண்டு வீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தது இலங்கை அரசு. தமிழ்ப் பெண்கள் பலர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ராணுவ முகாம்களில் வைத்து கற்பழித்து அவர்களை மிகக் கொடூரமாகக் கொன்று சடலங்களை மயானத்தில் புதைத்தும் நாடறிந்த விஷயமாகும்.
அதுமட்டுமல்லாது பல குடும்பங்கள் ஒரு வேலை உணவிற்காக அன்று கையேந்த வைத்தார் ராஜபக்சே. இலங்கையில் போர் உக்கிரமாக இருந்தபோது தமிழர்கள் வாழும் பகுதிக்கு வெள்ளை நிற வேன் வந்தாலே மக்கள் ஓடி ஒழிந்து கொள்வார்களாம். காரணம் அந்த வேனில் ஏற்றப்பட்டவர்கள் யாருமே திரும்பவில்லை. யாருடைய விவரமும் இதுவரை இல்லை என்பதே அதிரிச்சியான விஷயமாகும்.
இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவித்ததன் விளைவாக பல லட்சம் பேர் இலங்கையை விட்டு வெளியேறியதும், 2019 ஈஸ்டர் அன்று இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் பெரும் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தோனேசியாவை போலவே இலங்கை அரசு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் இங்கு இயங்கும் சுற்றுலாத்துறைகள் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்தின் 15%க்கும் மேலாக அந்நிய முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் முற்றிலும் முடங்கிப்போனது.
மேலும் ராஜபக்சே சகோதர்களின் அரசு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்ற குறுகிய நோக்கில் உரங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தது. இதன்விளைவாக வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. மற்றொரு புறம் சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், இயற்கை வளங்கள் என ஏறக்குறைய 7 பில்லியன் டாலர் கடன் பெற்று , அதில் பெரும்பாலான தொகை ஊழலில் ஏப்பம் விடப்பட்டது. இதன்விளைவாக இன்று இலங்கையில் எரிபொருள் விலை, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்தது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஒரு கோமாளி கூட்டத்திற்கு தலைவரான ராஜபக்சே ஆட்சியில், உழைக்கும் கூட்டமான தமிழர்களை இனப்படுகொலை செய்தது மட்டுமின்றி பல லட்சம் மக்களை நாட்டை விட்டு விரட்டியது. ஆனால் இன்று ராஜபக்சேவும், அவரது குடும்ப ஆட்சியில், அன்று ராஜபக்சே பின்னால் இருந்த கோமாளி கூட்டத்தை கையேந்த வைத்துள்ளார்கள்.