ஒரே நொடியில் சீட்டு கட்டு போல மொத்தமாக சரிந்த அடுக்குமாடி கட்டிடங்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு வலிமையான நிலநடுக்கங்கள் பதிவானது. அந்நாட்டில் சமீப ஆண்டுகளில் பதிவானதிலேயே இதுதான் வலிமையானது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்குப் பூகம்பத்தால் ஒரு மாபெரும் கட்டிடம் நொடிகளில் இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
இப்போது, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சுமார் 11.50 மணியளவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டார் அளவில் 7.7ஆகப் பதிவாகியிருந்தது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சப்பட்டு ரோட்டிற்கு ஓடி வந்தனர். 2 பயங்கர பூகம்பங்கள் முதலாவது நிலநடுக்கம் தாக்கிய அடுத்த சில நொடிகளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தின் மையப்பகுதி சாகைங் அருகே அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கி வரை வலுவாகவே உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட இந்த பூகம்பம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் மியான்மர் நாட்டில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், மேலும் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் வீடியோக்கள் இதற்கிடையே பூகம்பம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை உணர்த்தும் வகையிலான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.