ஏன் உயிரை விடனும் .! அவனோடவே வாழட்டும்..!

அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து கொன்று கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டி உடலை காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கினார். அதேபோல, அவுரியாவில், கட்டாய திருமணம் செய்து வைத்ததால், திருமணமான 2 வாரங்களிலேயே தன்னுடைய காதலனுடன் சேர்ந்து தன் கணவரை, இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்கின்றாள்.

இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபிர் நகரிலுள்ள கடார் ஜாட் என்ற கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி பப்ளு.. கடந்த, 2017-ல் ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பப்ளு வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம், பப்ளுவுக்கு தெரியவந்தது.

இதனால் ஊருக்கு திரும்பிய பப்ளு, இதுகுறித்து ராதிகாவை கண்டித்துள்ளார். ஆனால், ராதிகாவோ, விகாஷை தன்னால் மறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். உடனே யாரும் எதிர்பார்க்காத நிலையில், ராதிகாவை அவருடைய கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைப்பதாக பப்ளு கிராம மக்களிடம் அறிவித்தார். அத்துடன், 2 குழந்தைகளையும் தானே வளர்ப்பதாகவும் கூறினார். இதைக்கேட்டு, ராதிகா உட்பட மொத்த பேரும் திகைத்து மட்டுமின்றி கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கிராம மக்களையும் சமாதானம் செய்து பப்ளு ஒப்புதலை பெற்றார். இதையடுத்து குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு, மனைவியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு, தன்னுடைய குழந்தைகளை தன்னுடனேயே பப்ளு அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து பப்ளு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மனைவியின் கள்ளக்காதலால் எனக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை, ஆபத்துகளை தவிர்ப்பதற்காகவே நான் அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். சமீப காலமாகவே, கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மீரட்டில் நடந்த சம்பவத்தை பார்த்ததுமே எனக்கு குலைநடுங்கிவிட்டது. அதனால்தான், நாங்கள் இருவருமே நிம்மதியாக வாழ என்ன வழி என்று யோசித்து, என் மனைவியை அவளுடைய கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்” என பப்ளு தெரிவித்தார்.