அன்று, 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்; இன்று…டாஸ்மாக்… தியாகி… தம்பி. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன. இதனை வைத்து தற்போது அதிமுகவினர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில் யார் அந்த தம்பி? என்ற போஸ்டர்களை அதிமுகவினர் ஓட்டியிருந்தனர். இந்த போஸ்டர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று, 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்; இன்று…டாஸ்மாக்… தியாகி… தம்பி. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு” என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.