ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பெண்

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா. இவர் மீது ஓட்டேரி, பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெடுங்குன்றம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி விஜயலட்சுமி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். அதன்பின்னர் அங்கு வந்த ஓட்டேரி காவல்துறை சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் கைது செய்து செங்கல்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் விஜயலட்சுமி தனது வக்கீல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜயலட்சுமியை எதிர்த்து தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி சார்பிலும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.