கழுதைப்பால் வியாபாரத்தில் யூடியூப் சேனலில் அதிக ஆர்டர்கள் வருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக திருநெல்வேலியை சேர்ந்த நிறுவனம் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் கிரிசுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை கூட்டாளிகளாக கொண்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்ற ‘டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் கழுதை பண்ணையை தொடங்கினார்.
இவர்கள் ஈமு கோழி பாணியில், கழுதைப்பால் ரூ.1600 முதல் ரூ.1800 வரை ஒரு லிட்டருக்கு வழங்குவதாக விளம்பரம் செய்து உள்ளனர். இதுமட்டுமின்றி, யூடியூப் சேனல்களில் தனக்கு அதிகளவில் கழுதைப்பால் கேட்டு ஆர்டர்கள் வருவதாகவும், ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு மக்களை நம்ப வைத்துள்ளனர்.
மேலும், கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதனை உண்மை என நம்பிய தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலர், அந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் கழுதைப்பால் விற்பனையில் லாபம் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களில் முதலீட்டாளர்களை கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், கருத்தரங்கு நடத்தியுள்ளார். இவர்களின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் இதில் இணைந்தனர். இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ரூ.5 லட்சம் வசூலித்துள்ளனர். மேலும் கழுதைகளுக்கு சிகிச்சைக்கான முதலீடு எனக்கூறி ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
மேலும், கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்தால் அது கெட்டுவிடும் என்பதால், அதனை பாதுகாக்க பிரிட்ஜ் வேண்டும் எனக்கூறி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி என மொத்தம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் பணம் ஈட்டியுள்ளனர். ஆனால் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.