எத்தனையோ நீதி கதைகளை வெளியுலகிற்கு பறைசாற்றி நாங்கள் உத்தமர்கள், நீதிமான்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்தாலும் பணம் படைத்தவர் மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது நடத்தும் கொடூரங்கள் சொல்லிலடங்காதது. இதனால் வாழ வேண்டிய வயதில் பல பிஞ்சுகள் அவர்களது வாழ்க்கையை தொலைப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் விவாத பொருளாக மாறி விடுகின்றனர்.
இன்று நம் விவாத பொருளாக மாறியுள்ள பிஞ்சு.. மகாராஷ்ட்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்து உள்ளார். மேலும் எட்டு மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்பின்னர், அந்த சிறுமியின் கணவர் மற்றும் மாமியாரால் பல கொடுமைகளை அனுபவித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கணவன் வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையிடம் வந்து அடைந்துள்ளார்.
ஆனால், இன்று உலகையே இரண்டுகளாக ஆட்டி படைக்கும் கொரோனா கோர தாண்டவத்தில் பல செல்வ சீமான்களும் பிச்சை எடுக்கும் நிலையில் தத்தளிக்க அந்த சிறுமி வேலை தேடி அம்பேஜெகோய் நகரை நோக்கி சென்றுள்ளார். அங்கு வேலைதேடிப் பல இடங்களில் அலைந்து திரிந்த சமயம் அந்த சிறுமியிடம், வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன்பின்னர் நிர்கதியாய் நின்ற சிறுமி செய்வதறியாத நிலையில் வயிற்று பசிக்காக பீட் மாவட்டத்திலுள்ள அம்பாஜோகை பேருந்து நிலையத்தில் கையேந்த அங்கு சுற்றி திரியும் வெறிநாய் கூட்டம் இந்த சிறுமியை வேட்டையாடி உள்ளது. இந்த வெறிநாய்களுக்கு பாடம் புகட்ட அம்பஜோகை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் காவலர் உடையில் “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” சுற்றி திரியும் கேவலமான ஈன பிறவியியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
மேலும் குற்றவாளிகள் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு தொடர் கதையாக மாற அந்த சிறுமி 6 மாதங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்முறை செய்து உள்ளனர். இந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை, நல்லோர் சில குழந்தைகள் நலக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன்விளைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராமசாமி நடவடிக்கையால்…. குழந்தை திருமணத் தடைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒரு காவலர் உற்பட இதுவரை மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.