ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.
இந்நிலையில் பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த நெசவு தொழிலாளியான எல்லத்துரை என்பவர் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவர்களின் கைகளில் தறி மற்றும் ராட்டை இருந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது ஆண்டிப்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற போது அந்த பகுதியில் இருந்தவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த தறி, ராட்டையை சேதப்படுத்திவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.