தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி. அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு சென்று மதன் குமார் பெண் கேட்டுள்ளார்.
ஆனால் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் மதன் குமாருக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் இன்று காலை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.