உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணு ஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி ரஷ்யா அதிபர் விளாதிமிர் பூட்டின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருந்த மோதல் என்பது தற்போது போராக மாறி உள்ளது.
ரஷ்யா, உக்ரைன் எல்லை பிரச்சனைக்கு நடுவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கிய போர் 3-வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து தற்போது ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா படைகளை உக்ரைன் சமாளித்து வருகிறது. போரை கைவிட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என ரஷ்யாவுக்கு நம் நாடு உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன.
ஆனால் அதிபர் போரை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருவது விளாதிமிர் பூட்டினுக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையே தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் மூலம் ரஷ்யாவுக்குள் அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருதுகிறது. தொடக்கம் முதலே அமெரிக்கா உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை செய்து வருகிறார். அதோடு அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.
இதற்கு ரஷ்யா தரப்பில் அவ்வப்போது அணு ஆயுதத்தை மையப்படுத்தி விடுவிக்கப்பட்ட மிரட்டலும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா போர் என்பது தற்போது உச்சக்கட்டத்தை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.