டிஜிட்டலுக்கு மாறிய லஞ்சம்..! சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை. ..!

தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அடிக்கடி சோதனை நடத்தி கணக்கில்வராத பணம் பிடிப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்துவது வழக்கம். விசாரணையில் அவர்கள் மீது தவறுகள் இல்லை என்றால் எந்த ஒரு பிரச்சனைனும் இல்லை. ஆனால் மாறாக கணக்கில் வராத பணம் லஞ்சம் வாங்கி சேர்த்தவை என்று தெரியவந்தால், அவர்கள் மீது கைது, பணியிடைநீக்கம், துறைரீதியான நடவடிக்கைகளும் அதிரடியாக பாயும்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புதுறை, சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை சாலை பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சார் பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் லஞ்ச ஒழிப்புதுறைக்கு அதிக அளவில் பறந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் காவல்துறையினர், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்த சோதனையின் போது, சார் பதிவாளர் சாந்தி மட்டும் இருந்தார். அவரிடமும், அலுவலகத்தில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று மதியம் வரை தொடர்ந்தது.

அப்போது நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் சார் பதிவாளர் சாந்தி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ,25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சம் பெற்றிருப்பதும், அதை குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு மாற்றி வாங்கியதையும் கண்டுபிடித்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நவீன்குமார் என்பவர் முன்கூட்டியே லஞ்ச பணத்துடன் தப்பி ஓடியதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் பிரவீன்குமார், சார் பதிவாளரின் வாகன ஓட்டுநர் ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரிந்துரைத்தனர்.