முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2021ல் உயர்கல்வி படிக்க உதவி கோரிய மாணவிக்கு மதுரை செல்லும்போது அந்த மாணவியைச் சந்தித்து கல்வி உதவிகளை வழங்கி இருந்தார். இந்நிலையில், அந்த மாணவி தற்போது படிப்பை முடித்துள்ள நிலையில், அவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கியதோடு, இன்று நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷோபனா கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். மாணவி ஷோபனாவின் கடிதத்தை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ஷோபனாவிற்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
அதன்படி, ஷோபனா அந்தக் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாக படித்து வந்தார். தனது படிப்புக்கு உதவிய மு.க. ஸ்டாலினை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று அந்த முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அதனையும் கண்ட மு.க. ஸ்டாலின், விரைவில் தானே சந்திப்பதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்பிறகு 2021 -ஆம் ஆண்டு அக்டோபர் 29 -ஆம் தேதி பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்ற போது, அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் வரவழைத்தார். குடும்பத்தினரோடு வந்த அந்த மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, முதலமைச்சர் வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், மாணவி ஷோபனா 3 ஆண்டு படிப்பை முடித்த நிலையில் ஷோபனாவிற்கு, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணியில் சேரவும் உதவியுள்ளார். இன்று ஷோபனாவை நேரில் சந்தித்து, அவருக்கு வாழ்த்துக் கூறி, தான் கையெழுத்திட்ட புத்தகங்களை பரிசாக மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார். மாணவி ஷோபனாவிற்கு கல்லூரியில் சேர உதவியதோடு, படிப்புக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்து வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று வேலையும் வழங்கியுள்ளார் என ஷோபனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.