திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.
மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.
தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.
மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.
சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.