மம்தா பானர்ஜியின் இறுதி அழைப்பு: பயிற்சி மருத்துவர்கள் முதலமைச்சரின் இல்லத்திற்கு வாருங்கள்..!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு 5-வது முறையாக மேற்கு வங்க முதல்மைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இதுதான் இறுதி அழைப்பு என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

36-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள், சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்த்யா பவனுக்கு வெளியே 8 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு கடந்த சனிக்கிழமை நேரில் வருகை தந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் சமாதானத்துக்காக தான் மேற்கொள்ளும் கடைசி முயற்சி இது என்றும் கூறினார்.

முதலமைச்சரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில், மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது கடிதத்தில், “தல்வர் மற்றும் உங்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பிற்காக நாங்கள் உங்களை அணுகுவது இது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாகும். முதலமைச்சரின் காளிகாட் இல்லத்தில் ஒரு திறந்த மனதுடன் ஒரு கலந்துரையாடலுக்கு உங்களை மீண்டும் அழைக்கிறோம்.

நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், சந்திப்பை நேரலை செய்யவோ அல்லது வீடியோ எடுக்கவோ முடியாது. மாறாக, கூட்டத்தில் பேசப்படும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினராலும் கையெழுத்திடப்படும். பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள பயிற்சி மருத்துவர்களின் பிரதிநிதிகள் இன்று மாலை 4.45 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்திற்கு வாருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்கள் திட்டவட்டம்: “கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்..!”

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது மருத்துவர்களின் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அதுவரை அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் தொடர்ந்து பணியை புறக்கணித்து வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சேவை செய்ய விரும்பும் சமூகத்தின் கவலைகளை அவர்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கு தனித்தனி ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலனை செய்வோம். இல்லையெனில், முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் விரும்பவில்லை என்றே நாங்கள் புரிந்துகொள்வோம். அப்படியானால், மாநிலம் முழுவதும் ஏற்படும் சூழ்நிலைக்கு நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பாக்குவோம்.

மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும், கொல்கத்தா காவல்துறைத் தலைவரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிசிடிவி கேமராகூட நிறுவப்படவில்லை. ஓய்வெடுக்கும் அறை இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.