நக்கீரன் கோபால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுப்பு..! ஓம்கார் பாலாஜி அதிரடி கைது..!

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 -ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.

இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இந்த மனு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மாற்றி தானாக முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மனுவை மாற்றி தாக்கல் செய்ய சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்ற ஓம்கார் பாலாஜி, என்னை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளனர், எனவே காலை சரணடைகிறேன் என்று கோரினார். அரசு வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காததால் இனி காவல்துறையினர்தான் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, இப்போது நிவாரணம் கோர முடியாது என தெரிவித்தார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி வழக்கறிஞர்கள் சங்க அறைக்கு சென்றார்.

கைது செய்ய எந்த தடை உத்தரவும் இல்லாததால் ஓம்கார் பாலாஜியை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து வாயில்களிலும் கோயம்புத்தூர் காவல்துறை நிறுத்தப்பட்டனர். ஓம்கார் பாலாஜி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் ஓம்கார் பாலாஜி வெளியில் வந்தபோது அவரை காவல்துறை கைது செய்து பின்னர் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.