செல்வப்பெருந்தகை: திமுக – காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை போன்றது..!” யாரும் சிதைக்க முடியாது..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசினார்.

செல்வப்பெருந்தகை காட்டம்: இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள்..!

கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து, கோயம்புத்தூர் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பன் மாலை அணிந்து பேசினார். அப்போது, ‘இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள். கோவையின் அடையாளமாக விளங்கும் இங்குள்ள மிகப்பெரிய உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்கவைத்து, அவமானப்படுத்தி, வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம், கோவை மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டார்கள். இது, கோவை மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். பாஜகவின் இந்த பாசிச ஆட்சியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எதிர்கட்சிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, சாமானிய மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், இப்படி எல்லோரையும் வருந்த செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அற்ப விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். அவர், தமிழக மக்களிடம், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகை தலைமையில் மத்திய அரசையும், நிர்மலா சீதாராமனையும் கண்டித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றதும் அனைவருக்கும் பன் வழங்கினார். அப்போது செல்வப்பெருந்தகை இது, கிரீம் இல்லாத பன்… ஜி.எஸ்.டி கிடையாது… தைரியமாக சாப்பிடுங்கள் என உற்சாக மூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.