ஜெயக்குமார்: உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான்..!

உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

2019 -ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

T – shirt பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது T – shirt போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது T – shirt போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு T – shirt போட்டு செல்வது உதயநிதிதான்.  T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜெயக்குமார் கேள்வி: சீனியர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ஏன் ..!?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.

திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதலமைச்சர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்? துணை முதலமைச்சராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

39 வயது அண்ணாமலையை விடுங்கள்…! 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும்..!

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம், நூறு சதவீதம் என்னைப் பொறுத்தவரை சரி. அதிலிருந்து நான் ஒரு புள்ளி அளவுகூட பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் என்னை திட்டலாம். என்னை தற்குறி என்று கூறலாம். படிப்பு குறித்து பேசி கொச்சைப்படுத்தலாம். நான் செய்யக் கூடிய வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் அவர்கள் செய்யலாம்.

நான் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா, உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. எனக்கு 3 வருட அனுபவம்தான் இருக்கிறது, என்று சொல்வதற்காக நான் வரவில்லை. கை, காலைப் பிடித்து, வேலை செய்யாமல் உழைக்காமல் நான் வந்ததாக கூறுகின்றனர். விடிய விடிய படித்தது எனக்கு தெரியும். விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய எங்க அப்பாவுடன் மண்வெட்டி பிடித்த கை. இருபது வருடங்கள் ஆனாலும், இன்னும் காப்புக் காய்ச்சிருக்கிறது பாருங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியும்.

மேலும் ஜெயக்குமார் அரசியல் அனுபவம் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறாரா? 39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும். கையை, காலைப் பிடித்து இந்தப் பதவிக்கு வந்ததாக கூறுகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரதம் நடக்கிறது. மத்தியப் பிரதேச அரசின் முதலமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வரவேற்க நான் செல்வது இல்லை. ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழகத்தை முதன்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக? தமிழக மக்கள் அந்த அரசியலை விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் போன்று பாஜக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனவே, அதிமுகவினர் குய்யோ, முய்யோ என்று கத்துவதை விட்டுவிட வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன்.

53 வயது ராகுல் காந்தி இளைஞர் என்று சொல்லும் அளவுக்கு மோசமாக போய்விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக எத்தனை ஆண்டு காலம் இருந்தார்? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவர் அவருக்கு வயது 50. எங்களுடைய கட்சியில் 35 வயதுக்கு மேல் ஒருநாள் இருந்தாலும் இளைஞரணி தலைவராக இருக்க விடமாட்டேன். அதை மூன்று வருடமாக கடைபிடிக்கின்றோம். தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை. நான் கையை, காலைப் பிடித்து வந்ததாக அதிமுகவினர் கூறினர். அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை, உரிமை. என்னுடைய நாற்காலிக்கு அந்த மரியாதை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கான இருக்கைக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்காக நான் பதில் சொல்லியிருக்கிறேன்,” எனஅண்ணாமலை தெரிவித்தார்.

எல்.முருகன் சரவெடி: பாஜக இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகியிருக்காது…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் கைது குறித்து கேள்விக்கு, மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற காரணங்களினால் எல்லை தாண்டும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. நாம் உடனடியாக தலையிட்டு அவர்களை பத்திரமாக மீட்டு வருகிறோம். அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்முறையாக மீனவர்கள் நலனுக்காக ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எல்.முருகன் தெரிவித்தார்.

அப்போது, அதிமுக போட்ட பிச்சையில்தான் 4 பாஜ எம்எல்ஏக்கள் உள்ளார்கள் என்று ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு எல்.முருகன், ‘இதுபற்றி மாநில தலைவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். அவரது கூற்றுப்படி நாங்கள்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளோம். கூட்டணி என்றால் கொடுக்கல் வாங்கல் இருக்கும். எங்களது வாக்குகளை மாநிலம் முழுவதும் வாங்கியுள்ளார்கள். எங்களது வாக்குகளால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு வந்துள்ளார்கள் என எல்.முருகன் சரவெடியாக பதிலளித்தார்.

திருநாவுக்கரசர்: ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர் ..!

புதுக்கோட்டையில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 1989-ல் சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்தும், திருநாவுக்கரசர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வதாக பேசியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஜெயக்குமார் எந்த காலத்தில், அதிமுகவில் சேர்ந்தார்? எந்த காலத்தில் அதிமுகவில் இருந்தார்? என்று எனக்கு தெரியவில்லை. எம்ஜிஆரை எல்லாம் அவர் பார்த்திருக்கிறாரா? என்றும் எனக்கு நியாபகம் இல்லை. அவர் ஜெயலலிதாவிடம் எப்போது வந்து சேர்ந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, ஜெயலலிதாதான் எனக்கு நன்றிக்கடன் பட்டவரே தவிர, நான் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டவன் கிடையாது.

நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். நான் காப்பாற்றியதால் தானே மீண்டும் அவர் முதல்வரானார். நான் காப்பாற்றியதால் தானே, இவர்கள் எல்லாம் அமைச்சர்களாகி சாப்பிட்டு சவுகரியமாக இருக்கின்றனர். அப்போது ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருக்கவேண்டுமா? நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்கவேண்டுமா?. ஜெயலலிதாவுக்கு நான் நிறைய செய்திருக்கிறேன்.

ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல்தான் செய்துள்ளார். அதுமுடிந்துபோன விஷயம். அவர் பாவம் இயற்கை எய்திவிட்டார். அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எனக்கும், ஜெயக்குமாருக்குமா பிரச்சினை? எனவே, அதிமுகவினர் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாதான் என்னிடம் உண்டு உள்ளார். நான் அதிமுகவில் உண்ணவே இல்லை. உண்ணாமல் எப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய முடியும்?” என தெரிவித்தார்.