புதுச்சேரியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார். அப்போது, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என்று தமிழர் ஒற்றுமைக்கு போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு நான் வந்திருக்கிறேன்! பிரெஞ்சு – இந்திய விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்து, இந்த மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் குரல்கொடுத்த விடுதலை இயக்கத் தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் போற்றிப் பாதுகாத்த புதுச்சேரி மண்ணிற்கு வந்திருக்கிறேன். கடல் அழகும் – இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன்.
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக – இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குப் புதுச்சேரியில் அறிமுகம் தேவையில்லை! மக்கள் பணியாற்றி புதுச்சேரியின் உயர்வுக்காகப் பாடுபட்டு, உங்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்! விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இப்போது இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் வேட்பாளராக, உங்கள் முன்னால் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளாகக் காங்கிரஸ் பேரியக்கத்தில் பயணிப்பவர். எட்டு முறை சட்டமன்ற உறுப்பினர்.
அதில், எதிர்க்கட்சித் தலைவராக – அமைச்சராக – சட்டப்பேரவைத் தலைவராக – இரண்டு முறை முதலமைச்சராக என்று பழுத்த அரசியல் அனுபவத்திற்குச் சொந்தமான இவர், இரண்டாம் முறையாக நாடாளுமன்றத்திற்குச் செல்ல உங்களின் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறார். வைத்திலிங்கம் அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களித்து, சென்ற தேர்தலைவிட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். வெற்ற பெற வைப்பீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா?
புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் பேரியக்கமும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான் பாடுபட்டிருக்கிறது. புரட்சிகரத் திராவிட இயக்கத்தையும் – புதுவையையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைத் தந்த மண் இது! தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ தடைசெய்யப்பட்டபோது, அதைத் துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண் இது!
தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மண், இந்த புதுச்சேரி! அதனால் தலைவர் கலைஞருக்கு தமிழ்நாடும் – புதுச்சேரியும் ஒன்றுதான்! அதே உணர்வுடன்தான், இந்த ஸ்டாலினும் – புதுச்சேரி மக்கள்மீது தனிப்பாசம் கொண்டவன். அந்த அடிப்படையில்தான் சிவா, சிவக்குமார், நாஜீம் என்று இங்கு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும், இந்தப் புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார்கள். அந்த உரிமையோடுதான், உங்களிடம் நான் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வும் – காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது! இதைப் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். இங்கு நம்முடைய வேட்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் அவர்கள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது, அவருடன் மோதினார்கள் ஒரு துணைநிலை ஆளுநர்.
பா.ஜ.க.வின் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களைப் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக போட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கினார், ஒரு துணைநிலை ஆளுநர்! அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள்.
புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நம்முடைய நாராயணசாமி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் அரசியல்சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க.!
இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த அம்மையார் கிரண் பேடி அவர்கள்! ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர் அவர்! சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள்! அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி!
பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் – மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பா.ஜ.க.வின் கொள்கை! தமிழ்நாடு போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும்! புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிட வேண்டும்! ஒட்டுமொத்தமாக எல்லோரும் தில்லிக்குக் கீழ் இருக்க வேண்டும்! இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா! அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர்!
இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும்! மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்திருக்கிறோம்.
புதுச்சேரி முன்னேற வேண்டும் – புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும்! இந்தியா கூட்டணி தில்லியில் ஆட்சியில் அமர வேண்டும்! ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோம்.
அதில் முக்கியமான வாக்குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகிறது!
சேதுராப்பட்டு கரசூரில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தாமல் பயனற்றுக் கிடக்கும் 800 ஏக்கர் நிலத்தில் பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்படும்!
1980–83 தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காகவும் – இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் நிறுவப்பட்ட லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், திருபுவனை கூட்டுறவு நூற்பாலையும் இன்றைய பா.ஜ.க. – என்.ஆர்.காங்கிரஸ் அரசால் மூடப்பட்டு கிடக்கிறது. இது நவீனப்படுத்தித் திறக்கப்படும்!
புதுச்சேரியில் பல்லாயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த ஆங்கிலோ பிரெஞ்சு பஞ்சாலை, பாரதி பஞ்சாலை, சுதேசி பஞ்சாலை ஆகியவற்றை பா.ஜ.க. – என்.ஆர்.காங்கிரஸ் அரசு மூடிவைத்துள்ளதை மீண்டும் திறந்து நவீனப்படுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்!
கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டு, இன்றைய ஒன்றிய அரசால் கைவிடப்பட்ட சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இரயில் பாதை திட்டமும், திண்டிவனம் – புதுச்சேரி – கடலூர் வழி இரயில் பாதை திட்டமும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்கால் பேரளம் அகல இரயில் பாதை திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு, எர்ணாகுளம், மும்பை போன்ற பெருநகரங்களுக்கு மீண்டும் இரயில் சேவை தொடங்கப்படும்! இவை அனைத்திற்கும் மேலாகப் புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோகத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்!
கை சின்னத்தில் வாக்களிப்பது மூலமாக இத்திட்டங்களைச் செயல்படுத்தித் தர எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசும் – தி.மு.க.வும் நாட்டு நலன்களில் அக்கறை கொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது. 2006-இல் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ, அப்படி அன்னை சோனியா – சகோதரர் ராகுல் காந்தி – மதிப்பிற்குரிய மல்லிகார்ஜூன கார்கே – மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் ஆகியோர் அளித்துள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இன்றைக்கு நாட்டைக் காக்கப் போகும் கதாநாயகன்!
இந்தியா கூட்டணி சார்பில், சமூகநீதியைக் காப்பாற்ற – இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க – மதச்சார்பின்மையை நிலைநாட்ட – இந்தியா ஜனநாயக நாடாகத் தொடர – சபதம் எடுத்துள்ளோம்! ஆனால், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். ஒரு நாட்டின் பிரதமர் – அதுவும் பத்தாண்டு காலம் ஆட்சிசெய்த பிரதமர் என்ன பேசுகிறார்? மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்! சாதியின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார்! ஆனால் ஒருமுறைகூட, சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவேன் என்றோ எங்கும் மருந்துக்கு கூட சொல்லவில்லை!
ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது வாய் திறந்தாரா? ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார்! பட்டியலின – பழங்குடியின – மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று சொன்னாரா? அதுவும் இல்லை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும், நாட்டு மக்களுக்குப் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்ததுதான் பா.ஜ.க. அரசு! அதை லாபம் ஈட்டும் தொழிலாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் இங்கு விலையை அதிகரிப்பவர்கள், அங்கு விலை குறைந்தால் இங்கும் குறைக்க வேண்டுமா, இல்லையா? ஆனால், மோடி அரசு குறைக்கவில்லை.
அது மட்டுமா? உக்ரைன் – ரஷ்யா போரின்போதும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை வாங்கினார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பயன் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை. மோடி ஆட்சிக்கு வரும்போது 119 டாலராக இருந்த ஒரு பேரல், ஒரு கட்டத்தில் 29 டாலர் வரை சரிந்தது. ஆனால், அந்த அளவு பெட்ரோல், டீசல் விலை மக்களுக்காகக் குறைக்கப்பட்டதா? ஒரு சில கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பெரிய அளவில் பலனடைந்தார்கள். கோடிக்கணக்கான மக்களுக்காக விலையைக் குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால் போதும் என்று ஆட்சி நடத்தும் இந்த இரக்கமற்ற பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்!
கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரி இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம்! மின்சாரத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மின் ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. மின் கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது! புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தார்கள். கிரண் பேடி காமெடிகள் முடிந்த பிறகு, சகோதரி தமிழிசை வந்தார்கள். புதுச்சேரியில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேர்தல் வந்ததும் பா.ஜ.க.விற்கே மீண்டும் சென்றுவிட்டார்கள்! புதுச்சேரி வரலாற்றில் ராஜ் நிவாஸ் வாசலிலே, முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுச்சேரிக்கு பா.ஜ.க. செய்த சாதனை!
இங்கு வாக்கு கேட்டு வந்த பிரதமர் மோடி என்ன கூறினார். “பெஸ்ட் புதுச்சேரி“. தொழில் – சுற்றுலா – கல்வி போன்றவற்றில் புதுச்சேரியை பெஸ்ட் ஆக்குவோம் என்று சொன்னாரே – செய்தாரா? காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே – பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே? வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல் ரிப்போர்ட் கார்டு!
நாராயணசாமி அவர்கள் கட்சி மேலிடத்தைக் கேட்டு நடக்கிறார் என்று குறை கூறினார். ஆனால், இப்போது வேறு கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமியைத் தங்களின் பேச்சைக் கேட்கச் சொல்லி என்ன பாடு படுத்துகிறார்கள்? அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏதோ பெரிதாக ஆதங்கப்பட்டுப் பேசினீர்களே.
இன்றைக்குப் புதுச்சேரியில் முதலமைச்சராக இருப்பது யார்? ரங்கசாமி! உங்கள் கூட்டணியில் எது பெரிய கட்சி? ரங்கசாமியின் கட்சி! புதுச்சேரியில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது? ஒரே ஒரு தொகுதி! அதிலும் பா.ஜ.க.தான் போட்டியிடும் என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணமே நமசிவாயம்தான்! இப்போது அந்த நமசிவாயத்திற்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்தக் கட்சியையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருந்தவரை, தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். நமசிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார் என்ற வாங்கிப் பார்த்தப்போது எனக்கே தலைசுற்றியது.
தி.மு.க.வில் இருந்த நமசிவாயம் – ம.தி.மு.க.வுக்குத் தாவினார். ம.தி.மு.க.-இல் இருந்து த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து புதுவை மாநில காங்கிரசுக்கு தாவினார். புதுவை மாநில காங்கிரசில் இருந்து மீண்டும் த.மா.கா.வுக்குத் தாவினார். த.மா.கா.வில் இருந்து காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார். இன்னும் இரண்டு மாதம் கழித்து நான் வந்தால் அவர் எந்தக் கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமசிவாயத்திற்கே தெரியாது.
பா.ஜ.க.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி. ஆனால், இலங்கைக் கடற்படையினரால் கரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஷ்வகுரு இல்லை, மவுனகுரு!
அதுமட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல்! நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே! பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது! இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ.க. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது! ரங்கசாமி அவர்களை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை இங்கு நடத்திக்கொண்டு இருக்கிறது.
புதுச்சேரிக்கு ஒரு சட்டமன்றம் கட்டும் உரிமைகூட இல்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கிறதா? ஏழைகளின் வயிற்றில் அடித்திருக்கிறது, ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, பட்டியல் இனத்து மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி அவர்களுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டிருக்கிறதா? பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்த ஊழியர்களின் குடும்பங்கள் நடுரோட்டிற்கு வந்துவிட்டார்கள். தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும். கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இவர்கள்? ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி – ஒரே கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்ளே? புதுச்சேரியில் ஓடியதா?
புதுச்சேரி மக்கள் போராடிப் பெற்ற விடுதலையை, மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்க விட்டு, வேடிக்கை பார்த்த ரங்கசாமி, இப்போது எந்த முகத்துடன் பா.ஜ.க.வுக்காக வாக்குகள் கேட்டு வருகிறார்? இதில் மற்றொரு பக்கம் பாதம்தாங்கி பழனிசாமியின் அ.தி.மு.க. வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை! சிம்ப்ளி வேஸ்ட்! பா.ஜ.க. வேட்பாளரின் நன்மைக்காகதான் அ.தி.மு.க. இங்கு தேர்தலில் நிற்கிறது என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
பல்வேறு பண்பாடுகள் – சாதி, இன, மொழி கடந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மக்கள் – ஒன்றிய மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகக் கூடாது! இந்தியா கூட்டணியின் வேட்பாளராக – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த – முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்கு! புதுச்சேரியைக் காக்கும் வாக்கு!
நிறைவாக, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் வரிகளில் முடிக்கிறேன். “புதுச்சேரி என்பது படுத்துக் கொண்டிருக்கும் சிங்கம். அந்த சிங்கத்திற்கு சோதனை வந்தால் அது சிலிர்த்து எழும்”. அந்த வரிகளை உண்மையாக்க – புதுவை காக்க – புதுவை மக்களே எழுக! என்று உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதுவைத் தொகுதியில் நம்முடைய இந்தியா கூட்டணி கட்சியின் – காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களுக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.