பெண் குழந்தைக்கு தாயாக தனித்து வசித்து வந்த நடிகை கௌதமிக்கு பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். நடிகை கௌதமிக்கு அவரது குழந்தைக்கும் அழகப்பனின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஆறுதலாக இருந்த காரணத்தால் கௌதமி அழகப்பனை முழுமையாக நம்பினார். மேலும் தனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்லவிலைக்கு விற்று தருமாறு கவுதமி நம்பிக்கைக்குரிய அழகப்பனை அணுகி கேட்டுள்ளார்.
அழகப்பனும் தனக்கு தெரிந்த சென்னை அண்ணாநகர் 6 ஆவது அவென்யூவை சேர்ந்த பலராம், செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை கௌதமிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக கௌதமிக்கு உறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த நிலத்தை கடந்த 2015 -ம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணமாக கௌதமி எழுதி கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக அந்த இருவரும் கௌதமியிடம் தெரிவித்தனர். மேலும் நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கௌதமியிடம் கையெழுத்து பெற்றனர்.
இந்நிலையில் தான் கடந்த 2021 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து கௌதமிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு கவுதமி மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ 4.10 கோடிக்கு விற்பனையானதாக பலராமனும் ரகுநாதனும் சொன்னதன் பேரில் கௌதமி ரூ.65,31,500 வரி கட்டியுள்ளாராம். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
வருமான வரித் துறை கடிதத்தால் சந்தேகம் அடைந்த கவுதமி சொத்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016-ம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை மூவரும் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கௌதமி இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பல நாட்களாகியும் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து எல்லாவற்றையும் வெளிப்டையாக சொன்ன கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் நடிகை கௌதமியின் புகாரின் பேரில் அழகப்பன், அவருடைய மனைவி நாச்சி அழகப்பன் , மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.அவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் அவர்கள் 6 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை காவல்துறை தேடி வருகிறாரக்ள். அவர்கள் வெளிநாடு தப்பி விட்டார்களா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில் கௌதமிக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், அனைத்து மோசடியாளர்களும் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு தப்பிச் செல்கின்றன, அவர்களுக்கு யார் உதவுகிறார்கள்? ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும். சாமானியர்கள் இந்த உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், அரசியல் பலம் வாய்ந்தவர்களால் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.