ஈரோட்டில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி..!

ஈரோடு மாவட்டம், தேவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இத்துடன் அசோக்குமார், வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அவர்கள் நாட்டு பணத்திற்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித் தரும் பணியையும் கவனித்து வருகிறார். இது தொடர்பாக அசோக்குமார் இணையதளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், அசோக்குமாரை அணுகி, தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை வழங்க வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரிடம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீரியா நபர் கொடுத்த டாலரை, அசோக்குமார் ஆய்வு செய்த போது, அது போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம், அசோக்குமார் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோயம்புத்தூர் காட்டூர் பகுதியில், இதே போல் போலி கரன்ஸி கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக, நாதன் இகேச்சுக்வு மீது ஒரு வழக்கு உள்ள நிலையில், போலி டாலர் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, நைஜீரியா நபரை காவல்துறை கைது செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி போலி அரசாணை வழங்கி மோசடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மதனகோபால் என்பவர் தன்னை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், பன்னீர்செல்வத்துக்கு அரசு வேலைக்கான தனி ஒதுக்கீடு அதிகாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும் ஒரு பெரிய கட்டுகதை அவிழ்த்து விட்டுள்ளார்.

அதை உண்மை என்று நம்பி, வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவர் தனது மகள்கள் இருவருக்கு அரசு வேலை கேட்டு, மதனகோபாலை அணுகி ரூ.44 லட்சம் பணத்தை வாங்கி மதனகோபால் ஏமாற்றிவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மதனகோபால் கைது செய்து அவரிடம் இருந்து 1 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

நிதி நிறுவனத்தின் சார்பில் கடன் தருவதாக கூறி மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் மனு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அண்ணா புதுகாலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆராயி. என்பவர் தனது மகனுடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், தான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.1 லட்சம் அனுப்புமாறும் கேட்டு கொண்டார். இதை உண்மை என்று நம்பி நான், எனது மகன் திருமலையின் கூகுள் பே செயலி மூலம், மர்மநபர் அளித்த செல்போன் எண்ணிற்கு அன்றைய தினமே அக்கம்பக்கம் கடன் வாங்கி ரூ.5 ஆயிரம் அனுப்பினேன்.

பின்னர் கடந்த 5-ந் தேதி அன்று ரூ.30 ஆயிரமும், 7-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.73 ஆயிரத்து 500 அனுப்பினேன். அதன்பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு போதிய படிப்பறிவு இல்லாததால் ரூ.5 லட்சம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டனர். எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும் மனுவில் என தெரிவித்துள்ளார்.