தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி தனி ஒருவராக போராடிய இளம்பெண்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி. இவர் கடந்த 18-ந் தேதி நியாய விலை கடையில் 20 கிலோ அரிசி வாங்கிக் கொண்டு தனது சித்தப்பா சின்னச்சாமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது, புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த புளியரை காவல்துறையினர், அரிசியை பறிமுதல் செய்ததுடன் பிரான்சிஸ் அந்தோணியை காவல் நிலையத்தில் வைத்து துணை ஆய்வாளர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா தனது தந்தைய தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி அரசு மருத்துவமனை அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர் கீழே இறங்கி வந்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக பிரான்சிஸ் அந்தோணி தனது குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, திடீரென்று அபிதா மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.