ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டாலில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையில் சுகாதார சீர்கேடுகள் இருந்ததால் 14 நாட்கள் மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் சையத் அக்பர் பாஷா என்பவருக்கு சொந்தமான ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டாலில் பரபரப்பாக இயங்கி வருகின்றது. இந்த ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டாலில் குன்றத்தூரைச் சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டும் ராஜேஷ் என்பவர் பிரியாணி பொட்டலங்களை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பிரியாணி பொட்டலங்களை தனது மனைவி ரேபேக்கா, தங்கை சுகன்யா, தங்கையின் கணவர் மகேஷ் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த பிரியாணியை சாப்பிட்ட ரெபேக்காவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரியாணி ஆய்வு செய்தபோது அந்த பிரியாணியில் பல்லி இருந்தது தெரிய வந்தது. இத்தனை தொடர்ந்து பிரியாணி சாப்பிட்ட அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் சையத் அக்பர் பாஷாவிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ராஜேஷ் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குன்றத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் அந்த பிரியாணி கடையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது சமையல் கூடம் மற்றும் சில இடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவரை 14 நாட்களுக்கு கடையை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் பணிகள் முடிந்து மீண்டும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகே கடையை திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.