நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டதாக நவிமும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை காவல்துறை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
சல்மான் கானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 – 70 பேரை களமிறக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.