மகாராஷ்டிரா சட்டபேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.
மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மும்பையில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே, மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கெண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சுதந்திர இந்தியாவுக்கும் சமூக சீர்த்திருத்தத்துக்கும் மகாராஷ்டிரா எப்போதும் வழிகாட்டியுள்ளது. இந்த அறிக்கை மாநிலத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. இந்த தேர்தல் அறிக்கை மகாராஷ்டிர மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. சத்திரபதி சிவாஜி மகாராஜாவும் இங்கே இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இந்த அறிக்கை மாநிலத்தின் உணர்வினை வெளிக்காட்டுகிறது. விவசாயிகளை மதிப்பது மற்றும் பெருமை உணர்வினை வளர்ப்பதற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த அரசு பாதுகாப்பான மகாராஷ்டிராவை உருவாக்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என அமித் ஷா தெரிவித்தார்.