செல்லூர் ராஜூ விளக்கம்: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் பிரச்சனை..! அண்ணன் – தம்பி பிரச்சனை..!

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.

அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கீதா ஜீவன் விளக்கம்: மகளிர் உதவி எண் மைய பணிக்கான தகுதியில் தவறுதலாக பதிவேற்றம்..!

சமூக நலத்துறையின் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மைய பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண் 181 சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் 181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் “அழைப்பு ஏற்பாளர்” (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் தமிழக முதல்வர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. தமிழக முதல்வர் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்.” என கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.