புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுத்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக ஆட்சியரையும் சந்தித்து மனு அளிக்கலாம். அவர் எந்த துறை சம்பந்தப்பட்டதோ அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடுவார். அதேநேரம் சில நேரங்களில் நேரடியாக அதிகாரிகளே மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேபோல் விவசாயிகள் குறைதீர் கூட்டமும் நடைபெறும். அப்போது விவசாயிகள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறலாம். அதேபோல் முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா பிரச்சனை, பத்திரம் பிரச்சனை, தெருவிளக்கு, நூலகம், சாலை வசதிகள்,ஆக்கிரமிப்புகள் அகற்றம், காவல் நிலையங்களில் பிரச்சனை, வருவாய் துறையில் பிரச்சனை என எல்லா பிரச்சனைகளுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் பெண் ஒருவர், லஞ்சம் கொடுக்க பிச்சை போடுமாறு கூறி, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்துக் கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த பெண், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, அகரம்சீகூர் பார்டர் அரியலூர் மெயின்ரோட்டை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி விசாரணையில் தெரியவந்தது.
முத்தமிழ்ச்செல்வி தனக்கு புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கு கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்து இருக்கிறார் ஆனால் அந்த விண்ணப்பம் கடந்த ஜனவரி மாதம் நிராகரிக்கப்பட்டதாக கூறி செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளார். இதற்கிடையே புதிய குடும்ப அட்டை தொடர்பாக அந்த ரேஷன் கடை விற்பனையாளர், முத்தமிழ்ச்செல்வியுடன் செல்போனில் பேசியபோது லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முத்தமிழ்ச்செல்வி அந்த செல்போன் ஆடியோவை வைத்துக்கொண்டு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.