மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்: திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்..!

‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா தம்பதிகள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம். முதல் 2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.

அதேநேரம் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆணாக இருக்கும்பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் பெற்ற குழந்தைகள் இருப்பினும் தம்பதிகள் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் சுமுக இல்லற வாழ்க்கையை சம்பந்தப்பட்ட தம்பதி வாழ்ந்து வருவதற்கான சாட்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்திருக்கும் இந்த திருத்தப்பட்ட 2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றலாம். அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்வையிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துரை வைகோ குற்றச்சாட்டு: மத்திய அரசு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்கிறது..!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய திருச்சி எம்பியுமான துரை வைகோ பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது என பேசினார்.

அதன் பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜவினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை திசை திருப்ப அவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.

இந்தியாவில் மொத்தமாக 1000 பேருக்கு கூட தெரியாத சமஸ்கிருத மொழியை திருச்சி விமான நிலையத்தில் கல்வெட்டில் வைத்துள்ளார்கள். அதை நாம் எதிர்த்து பேசினால் வட இந்தியாவில் அதனை காட்டி இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாக பிரசாரம் செய்கிறார்கள். சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காகவே இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என துரை வைகோ பேசினார்.

மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள்…! மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்…!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசிய போது, தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசியது, சகோதரி கனிமொழி அவர்கள் முதலில் பெரியாரை பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 1951 -ம் ஆண்டு ஜூலை 22 ஆம்தேதி சேலத்தில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோபம் கொண்ட கண்ணகி ஒரு பக்கம் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம். அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரித்துவிடுகிறதாம்.

இதை நம்ப முடிகிறதா. பாண்டியன் மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா. இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா என பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்கச் சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்கள் படியுங்கள்.

ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள். சிறை சென்று திரும்பியவர்கள், 2ஜி முறைகேட்டில் சிக்கியவர்கள். கலைஞர் டிவியில் 3000 கோடி பணபரிவர்த்தனையில் சிக்கி சிறைக்கு சென்றவர். நீங்கள் எல்லாம் மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்.

நீங்கள் எல்லாம் பிரதமர் குறித்து பேசவே கூடாது. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் இரவும் பகலும் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எதை படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் திருக்குறளை படிக்கிறார், அதனால்தான் கனியன் பூங்குன்றனாரை படிக்கிறார். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார் என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பள்ளிச் சீருடையில் தலைமை ஆசிரியுடன் விமானத்தில் பறந்த மாணவி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை – வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துயுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை அளவில்லாத சந்தோஷத்தை அடையச் செய்தார்.