மதுபோதையில் பொதுமக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு சிறு குறு பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பனியன் நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் பலரும் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் சிக்கன் கடை ஒன்றிற்குள் புகுந்து பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியின் அருகில் உள்ள மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டதால், கையில் கட்டைகளுடன் துரத்தி துரத்தி பொதுமக்கள் மீதும், வாகனங்கள் மீது ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் அரசு மருத்துவமனையில் மயங்கி கிடந்த மருத்துவர்..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை மருத்துவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த மருத்துவர் புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.