மு.க.ஸ்டாலின்: பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்..!

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.