ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் வசூலித்த கடன் செயலி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் பனியன் நிறுவன தொழிலாளி இவரது மனைவி கவிதா. திருப்பூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்தபோது , குறைந்த வட்டியில் ரூ.5ஆயிரம் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் இருந்தது. இதையடுத்து இதற்காக அவரது புகைப்படம், ஆதார் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை கடன் செயலியில் பதிவேற்றி கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார்.

இதைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5ஆயிரத்திற்கான தவணை தொகையை செலுத்தி வந்தார். 8 மாதங்களில் அசல், வட்டியுடன் பணத்தை முழுவதுமாக செலுத்தி முடித்தார். இந்நிலையில் கடன் செயலியை சேர்ந்த கும்பல் கவிதாவின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பினர். அதனை கவிதா பார்த்தபோது அவரது ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடன் செயலியை சேர்ந்த கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது உள்ளது. அதனை செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களது ஆபாச புகைப்படங்களை இணையதளம் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, கடன் செயலி மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 8 மாதங்களாக மிரட்டி கவிதாவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை பறித்துள்ளனர். பணம் இல்லாதபட்சத்தில் கவிதா வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பணம் இல்லாததால் இதுபற்றி தனது கணவர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறைக்கு புகார் செய்தார். காவல்துறையினர் கவிதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கவிதா, மோசடி கும்பலுக்கு செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வர அந்த செயலின் கணக்குகள் குஜராத், மேற்கு வங்காளம், அசாம், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்குகள் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல வங்கி அதிகாரிகள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியில் 75 வயதான பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ள கந்தசாமி என்பவர் தனது மனைவி ருக்மணி மற்றும் தனது பேரன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள “ஈக்விடாஸ்” என்னும் தனியார் வங்கியில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார்.

கடன் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதம் 10-ம் தேதி மாத மாதம் 11 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி வந்துள்ளார். அதன்படி இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தி உள்ளார். இந்நிலையில், இந்த மாதம் 10-ம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணைத்தொகையை குடும்ப சூழல் காரணமாக 20 நாட்கள் ஆனாலும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

ஆகையால் கடந்த இரண்டு நாட்களாக கந்தசாமியின் வீட்டிற்கு எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரவுடிகளைப் போல வந்த தினேஷ் மற்றும் மணி என்ற இருவர் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும் இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள்ளோம் எனவும் வீட்டில் உள்ள டிவி இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு பூட்டு போட வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டுவிட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 75 வயதான கந்தசாமியை நாற்காலியில் அமர வைத்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சாலையில் அமர்த்தி உள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு மாத தவணைத் தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா என கூறி இருவரையும் சிறை பிடித்தனர். மேலும் வயதான நபரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடுப்பு முதல் அண்டா வரை சாலையில் வீசி இருவர் மீதும் பல்லடம் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கடன் பெறுவோர் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையில் கடன் தொகை திருப்பி செலுத்த முடியாமல் போனால், கடன் தொகைக்கான கால அவகாசம் கொடுப்பது, ஜப்தி போன்ற நடவடிக்கைக்கான முன் அறிவிப்பு, வீட்டின் முன்பு அறிவிப்பு ஓட்டுவது போன்ற பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில் அதனை எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கந்துவட்டி கும்பலை போல “ஈக்விடாஸ்” வங்கியின் அதிகாரிகள் கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.