கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்..!

மண்ணாசை, பெண்ணாசையினால் ஏற்படும் அழிவைக் காட்டிலும், பொன்னாலும், பொருளாலும் ஏற்படும் அழிவு ஒட்டு மொத்த சந்ததியையே சரித்து விடும் என்பதை மறந்து பொன்னையும் பொருளையும் மனிதன் தேடி அழைக்கின்றான். பணம் சம்மதிக்க எண்ணற்ற வழிகள் பல இருந்தும் நியாயம், நேர்மைகளை மறந்து பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பலர் அதர்ம வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். அதனுடைய விளைவுகள் பற்றி அவன் ஒருபோதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

தன்னுடைய முன்னோர் எப்படி கண்மூடித்தனமாக பொருள் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அலைந்து திரிந்து பொருள் ஈட்டினார்களோ அதோ வழியில் அவர்களுடைய சந்ததியினரும் தொடர்ந்து பொருள் ஈட்டுகின்றனர் என்பதே இன்றைய காலக் கொடுமையாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் இன்று தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மௌஷியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மௌஷியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் சிக்கி 12 வருட சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மௌஷியா தந்தையின் அதே நெட்வொர்க்கை பயன்படுத்தி பல போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது காவல் துறை கைது செய்துள்ளது.

சிட் பண்ட் நடத்தி பொதுமக்கள் பணம் ₹4½ கோடி ஆட்டைய போட்டதாக புகார்..!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பேர் சிட் பண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தொழில் செய்ய மூலதனமாக எங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பணம் பெற்று அந்த பணத்திற்கு வட்டியும் தருவதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக வட்டியும், அசலும் கொடுக்கவில்லை.

இது குறித்து நாங்கள் அவர்களிடம் சென்று கேட்டால் எங்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.4 ½ கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்பி பெற்று தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நாணயங்களுக்கு பணம் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.45 ஆயிரம் இழந்த இளைஞர்..!

சமீபகாலமாகவே ஆன்லைன் சந்தைகள் பெருகி கொண்டே வருகின்றன. பழைய மற்றும் அரியவகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்டுகளும், இந்த ஆன்லைன் சந்தையில் பெருகியபடியே உள்ளன. அதன்விளைவாக இன்று சமூக வலைத்தளங்களில் வெறும் 10 ரூபாய், 20 ரூபாய் இருந்தாலே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் பெருகி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி, வில்லியனூரை சேர்ந்த ஒருவர் பழைய நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதை கிளிக் செய்து அதன் உள்ளே சென்று பல்வேறு விவரங்களை தேடி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு உங்களிடம் இருக்கின்ற நாணயத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புமாறும் எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றும் அதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

அதை நம்பிய அந்த வாலிபர் தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்கள் மூன்றை படம் எடுத்து அவர்களுக்கு பேஸ்புக் மூலமாக அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து மோசடி நபர்கள் இந்த நாணயங்களை நாங்கள் சோதனை செய்துவிட்டோம். இது 600 ஆண்டுகள் பழமையான நாணயம். ஆகவே ஒவ்வொரு நாணயத்திற்கும் ரூ 5 லட்சம் பணம் தருகிறோம் என்று சொல்லி கட்டு கட்டாக இருக்கின்ற பணத்தை புகைப்படம் எடுத்தும் வீடியோவாக நேரில் லைவ் செய்துள்ளனர்.

மேலும் நாங்கள், நீங்கள் இருக்கின்ற இடத்திற்கு வருவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு வில்லியனூர் வாலிபரை தொடர்புகொண்டு கோரிமேடு அருகே தங்களை காவல்துறை பிடித்து பணம் கேட்பதாகவும், தங்களிடம் இன்சுரன்ஸ், லைசென்ஸ், சரியான ஆவணங்கள் இல்லாததாலும் எங்களுடைய காரில் ரூ 30 லட்சத்துக்கு மேல் பணம் இருப்பதாலும் இது குறித்து காவல்துறை கண்டுபிடித்து விட்டால் அத்தனையும் போய்விடும் என கூறியுள்ளனர்.

மேலும், உடனே பணம் அனுப்புமாறும் அதனையும் சேர்த்து வந்து கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய வில்லியனூர் வாலிபர் ரூ.44 ஆயிரத்து 800 பணத்தை அனுப்பியுள்ளார். மேலும் பணம் அனுப்ப அவர்கள் கேட்டதால், வில்லியனூர் வாலிபர் அவர்களுடைய மொபைல் எண் இருப்பிடத்தை சோதனை செய்தபோது அரியானாவில் இருப்பது தெரியவந்தது.

மேலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுக் கொண்டே இருந்ததால் பணம் அனுப்ப மறுத்து விட்டார் . உடனே அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர் அதன் பிறகு அவர்களுக்கு தொடர்பு கிடைக்காததால் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்து ஏமாற்றியோரை தேடி வருவதாக தெரிவித்தனர்.