சீமான்: தமிழக கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…!

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான கபடி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக வேல்ஸ் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உள்பட தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தானிலுள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், SRM பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடைபெற்ற போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என தமிழக வீரர்கள் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பிய போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் வீரர்கள் தமிழக வீரர்களை தாக்கிய ராஜஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டு பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதோடு, தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்லுங்கள் என்றுகூறி அவமதித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. விளையாட்டில் கூட உரிமையைக் கேட்க முடியாதபடி தமிழ்நாட்டு பிள்ளைகள் அடித்து விரட்டப்படுவார்கள் எனில் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? எப்படி வரும் நாட்டுப்பற்று?

இந்திய ஒற்றுமை, தேசப்பக்தி பன்முகத்தன்மை, இறையாண்மை என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள் இப்போது வாய் திறப்பார்களா? தமிழ்நாட்டு கபடி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழ்நாடு அரசு தமது கடும் கண்டனத்தை பதிவு செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை..!

வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர்.

இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்கின்றனர். சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும், மண் பைகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

எனவே, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளனர்.