குப்பைக்கு வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..! மேயர் வீட்டில் குப்பை வீசிய தெலுங்கு தேசம் கட்சியினர்..!

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு வீடு வீடாக ரூ.60 வரி விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தேசிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தன. அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த மூன்று மாதங்களாக குப்பைக்கு வரி வசூல் செய்யவில்லை.

ஆனால், கடப்பாவில் குப்பை வரி தொடர்பாக எம்எல்ஏ மாதவிரெட்டிக்கும், ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த மேயர் சுரேஷ்பாபுவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இதற்கிடையே வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என மேயர் சுரேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் சுரேஷ்பாபு வீட்டின் முன்பு குப்பைகளுடன் சென்று வீட்டின் முன்பும், வீட்டின் உள்ளேயும் குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடப்பா மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும்…!

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மங்களகிரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கலாமா? அல்லது எதிராக வாக்களிக்கலாமா? என விவாதிக்கப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கடந்த 2019-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு மீது முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கட்சி தெலுங்கு தேசம் கட்சிதான்.

ஆனால், தற்போது அவர்களுக்கு வலிய ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். அவர்களது நிலைப்பாடு தெளிவாக தெரியவில்லை. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் ஏறமுடியும். வரும் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதன்பிறகு வரும் எந்த தேர்தலிலும் நிற்க மாட்டேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை’ என்றார்.2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தனது கட்சி அரியணை ஏறாவிட்டால் இனி, எந்த தேர்தலிலும் தான்போட்டியிட போவதில்லை என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.