துரை வைகோ குற்றச்சாட்டு: மத்திய அரசு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்கிறது..!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய திருச்சி எம்பியுமான துரை வைகோ பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது என பேசினார்.

அதன் பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜவினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை திசை திருப்ப அவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.

இந்தியாவில் மொத்தமாக 1000 பேருக்கு கூட தெரியாத சமஸ்கிருத மொழியை திருச்சி விமான நிலையத்தில் கல்வெட்டில் வைத்துள்ளார்கள். அதை நாம் எதிர்த்து பேசினால் வட இந்தியாவில் அதனை காட்டி இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாக பிரசாரம் செய்கிறார்கள். சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காகவே இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என துரை வைகோ பேசினார்.