எல். முருகன் இப்போ உதயநிதி ஸ்டாலின்.. சீக்கிரம் முதலமைச்சர் ஸ்டாலின்..!

தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன், தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி அவர் தீபாவளியைக் கொண்டாடினார். அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார்.

அப்போது, தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்ட எல்.முருகன், முதலமைச்சரும் விரைவில் வாழ்த்து சொல்வார் என நம்புகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஆண்டுதோறும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைகளின் போது பாஜக , அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னதே கிடையாது. இதன் காரணத்தால், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழா ஆண்டின் நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் சுமார் 4,250 கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துறைமுகம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும். திராவிடம் என்ற வார்த்தையை எடுத்து விட்டால் திராவிடமே அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீங்கள் என்ன முயன்றாலும் திராவிடம் இருக்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், “நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.