முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “சேகர்பாபுவை நமது முதலமைச்சர் எப்போதும் செயல் பாபு என்றே அழைப்பார்.
அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டின் ஏற்பாடுகளைப் பார்க்கும் போதே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் அமைச்சர் சேகர் பாபு எதாவது ஒரு திருக்கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான்a இருப்பார். கோயிலில் தான் அவர் குடியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு அவரது பணி இருக்கிறது. இன்று அறநிலையத்துறை தன்னுடைய பணிகளை அறத்தோடு முன்னெடுத்துச் செல்கிறது.
திராவிட மாடல் அரசு இந்த மாநாட்டை திடீரென நடத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது திடீரென நடத்தப்படும் மாநாடு இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்த திராவிட மாடல் அரசு பல சாதனைகளைச் செய்துவிட்டுத் தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. சொல்லப்போனால் அறநிலையத் துறையின் பொற்காலம் என்றே திமுக ஆட்சியை சொல்லலாம்.
திராவிட இயக்கத்தின் தொடக்க புள்ளியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலைய துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, மக்களின் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குற்றக்குடி அடிகளார் விபூதியை கொடுத்த போது அதை மறுக்காமல் வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டவர் தந்தை பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கியவர் அண்ணா. பல ஆண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.
இந்த தலைவர்கள் வழியில் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திராவிட மாடல் அரசு அமைந்த 3 ஆண்டுகளில் 1400+ கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ. 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ 3,800 கோடி மதிப்பில் 8500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்.
நமது திராவிடம் யாரையும் ஒடுக்காது, அனைவரையும் இணைக்கவே செய்யும். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணமாகவே அனைத்து சாதியினர் மற்றும் பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற துறைகளை எப்படி இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறதோ.. அதேபோல தான் அறநிலைய துறையும் இந்தியாவுக்கு வழிகாட்டி வருகிறது.
இப்படி பல சாதனைகளை செய்த தமிழக அரசு இப்போது முருகன் மாநாட்டை நடத்துகிறது. முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டும் இல்லை. தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்” என உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.