mamata banerjee: பெண் மருத்துவர் கொலை விவகாரம் போராட்டத்தின் பின்னால் பாஜகவின் சதி இருக்கிறது..!

பெண் மருத்துவர் கொடூர கொலை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிர்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், இந்த சம்பவத்தில் விசாரணை உட்பட அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது. கொலையான பெண் மருத்துவரின் பெற்றோரை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ள நான் நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இது முழுக்க பொய் மற்றும் ஆதாரமில்லை இதன் பின்னால் பெரிய சதி உள்ளது. இந்த போராட்டத்தை தூண்டி விடப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி மற்றும் இடதுசாரிகளின் சதியும் உள்ளது. வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிலர் நினைத்தார்கள்.

இந்தியாவும் வங்கதேசமும் வேறு வேறு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் எப்போதும் உங்களை வரவேற்கிறேன். விரைவில் துர்கா பூஜை வருகிறது. எனவே திருவிழாக்களை கொண்டாடும் மனநிலைக்கு திரும்புங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

கொல்கத்தா போராட்டத்தில் காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி தேசியக்கொடியுடன் நின்ற முதியவர்..!

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ரது.

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை..!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘பெண் மருத்துவர் மரணத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சிம் பங்கா சத்ரா சமாஜ் என்ற மாணவர் அமைப்பு கொல்கத்தாவில் நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள், தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், ஹவுராவில் உள்ள நபன்னா கட்டிடத்தில் தலைமைச் செயலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், நபன்னாவை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். முன்னெச்சரிக்கையாக, கொல்கத்தாவில் இருந்து ஹவுரா செல்லும் சாலைகளில் 21 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 6,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஹவுரா பாலம் முழுமையாக மூடப்பட்டு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி காவல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில், பேரணி சென்ற மாணவர்கள், ஹவுரா பாலத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து முன்னேற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியும் கூட்டம் கலையாத காரணத்தால கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தின் வடக்கு நுழைவுவாயில் பகுதியில் திடீரென மாணவர்கள் திரண்டு, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை காவல்துறை தடியடி நடத்தி விரட்டினர். கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே 3 மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இதில் 100 மாணவர்களும், 15 காவல்துறையினர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டது.