மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியலிலும் இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி என்று மோடி புகழ்ந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்திய அரசியலிலும் இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கருணாநிதி. தனக்கென தனி முத்திரை பதித்த கருணாநிதியின் இலக்கியம் மற்றும் அவரது படைப்புகள் மூலம் அவருக்கு கலைஞர் என்ற அன்பான பட்டம் கிடைத்தது ஒரு அரசியல் தலைவராக சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கோடிட்டு காட்டி பலமுறை பணியாற்றியவர்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது கருணாநிதியின் நினைவையும் அவரால் நிலை நிறுத்தப்பட்ட லட்சியங்களையும் போற்றும் வகையில் இருக்கும். இந்த தருணத்தில் கருணாநிதிக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கலைஞரின் தொலை நோக்கு பார்வை உதவும்.
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் பங்கு மகத்தானது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும்” என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளர்.