ஓய்வூதியம் பெற 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற மூதாட்டி..!

சமூக வலைதளங்களில் மூதாட்டி ஒருவர் ஓய்வூதியம் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற வீடியோ பரவியது. இதையடுத்து இனி அந்தப் பெண்மணிக்கு வீட்டுக்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டம், ரைசுவான் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பத்தூரி தெகூரி. சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து மாநில அரசின் மதுபானி ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளியாக பத்தூரி சேர்க்கப்பட்டார். மாதந்தோறும் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகம் வந்து ஓய்வூதியத்தை பெற்றுச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் நடக்க முடியாத நிலையில் இருக்கும் பத்தூரி கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வூதியம் பெறுவதற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஊர்ந்து சென்றார். அவர் ஊர்ந்து செல்லும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. ‘‘ஓய்வூதியம் வழங்க யாரும் வீட்டுக்கு வராததால், வேறு வழியின்றி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஊர்ந்து சென்றேன்” என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.

சமூக நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே வந்துசேரும் என உறுதி அளிக்கப்படும்போதிலும் அதைப் பெறுவதற்கு மூதாட்டி ஒருவர் ஊர்ந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, ‘‘அந்தப் பெண்மணிக்கு ஓய்வூதியம் இனிமேல் அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்படும். அவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்படும்’’ என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கசுக்விந்தர் சிங் சுகு அதிரடி: கட்சி தாவும் எம்எல்ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது..!

இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான ரவி தாகூர், சுதிர் சர்மா, இந்தர் தத் லக்கன்பால், ராஜிந்தர் ராணா, தேவேந்தர் குமார் மற்றும் சேதன்யா சர்மா ஆகியோர் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர். இதனால் இவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் சுதிர் சர்மா மற்றும் இந்தர் தட் லக்கன்பால் ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு திரும்பிய நிலையில் மற்ற 4 பேர் தோல்வியுடைந்தனர்.

இந்நிலையில் இமாச்சல் சட்டப்பேரவையில் கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் எம்எல்ஏ.க்கள் ஓய்வூதியம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்தார். அந்த மசோதா இமாச்சல் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.