நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ, அவரது எக்ஸ் தளத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள். மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலிகான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.
இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, ‘திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் “குஷ்புவின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக குஷ்பு கக்கியிருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று குஷ்பு நினைக்கிறாரா..? நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி.ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசிய போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்?
குஷ்புவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது தான் குஷ்புவின் நோக்கம். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம்.
திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதலமைச்சரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பு கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.
சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்புவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.