உதவி – ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி காவலர் தங்கையுடன் கைது

தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் உதவி – ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர். அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார்.

முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர். சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.

உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை வைத்திருந்தார். அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. இவர் கோவைப்புதூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன். காவல் உதவி – ஆய்வாளர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 749 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதற்காக தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் தேர்வர்களின் தேர்வுக்கூட சீட்டை சரிபார்த்து தேர்வு மையத்திற்குள் உள்ளே அனுப்பி வைத்தனர். செல்போன், ப்ளூடூத் போன்ற எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனங்களையும் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இத்தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை எழுதுவதற்காக 4,834 ஆண்களும், 1,368 பெண்களும் என மொத்தம் 6,202 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,501 ஆண்களும், 805 பெண்களும் ஆக மொத்தம் 5,306 பேர் ஆர்வமுடன் வந்திருந்து தேர்வை எழுதினர்.

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை காவல்துறை கைது செய்துள்ளனர்.