மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமா..!? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் சட்டசபையில் மீண்டும் ஒருமனதாக தீர்மானம்..!

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழ்நாடு மாவட்டங்களைச் சூழ்ந்தது. வங்க கடல் பகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவையும் அரபிக் கடல் பகுதியில், மாஹேவும் உள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்டவை 1954-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக புதுச்சேரியும் இடம் பெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் சில நாட்களாக மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய சட்டசபை சபாநாயகர் செல்வம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி சட்டசபையில் 12 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தும் கூட மாநில அந்தஸ்தைப் பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசும் 2023-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு திருப்பித்தான் அனுப்பியது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் தனிநபர் தீர்மானமாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அரசு தீர்மானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்: கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில் பயனடையாத ஒரு மகளிரிடம், ஒருவர் சென்று ஓட்டு கேட்கிறார்! அப்போது அந்த நபர் அந்த அம்மாவிடம், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்ட உடனே, அந்த அம்மா, “ஸ்டாலினுக்குதான் ஓட்டு போடுவேன்”என்று சொல்கிறார்கள். “நீங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறீர்களா?” என்று அந்த நபர் கேட்கிறார்! அதற்கு அவர்கள், “இல்லை” என்று சொல்லிவிட்டு, உடனே, “எனக்குக் கிடைக்கவில்லை என்றால் என்ன? தேவையான எத்தனையோ மக்களுக்கு உதவுகிறார். நிறைய நல்லது செய்கிறார். அதனால், அவருக்குதான் ஓட்டு போடுவேன்” என்று அந்த அம்மா சொல்கிறார்கள்.

இப்படித்தான் நாங்கள் மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம்! நம்முடைய கூட்டணி சார்பில் பிரச்சாரத்திற்கு போகும்போது, ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் தாய்வீட்டுச் சீர் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறோம் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்!

அதுமட்டுமல்ல, நான் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, தமிழ்நாட்டில் மகளிர் சுதந்தரமாக, கட்டணமில்லாமல் விடியல் பேருந்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்! நான் அடிக்கடி ஒன்று சொல்வேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அதுவும் ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம். அதனால்தான் உயர்கல்விக்கு வர மாணவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

இதே போன்று, அடுத்து மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் என்ற பெயரில், மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம். இதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத் தலைமுறையான குழந்தைங்கள் ஆரோக்கியமாக, பசி இல்லாமல் படிக்கவேண்டும் என்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கி, 16 இலட்சம் குழந்தைகளுக்குச் சுவையான காலை உணவு அளிக்கிறோம். இது இப்போது கனடா நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது!

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவேண்டும் என்று, தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, “நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 77 இலட்சத்து 78 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிறதாம்! EPFO புள்ளிவிவரம் சொல்கிறது! இது மாநில அரசின் புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசுடையது!

”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் ஒரு கோடிப் பேருக்கும் மேல் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தி.மு.க. எப்போதும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று நிரூபித்தது மட்டும் இல்லை, இந்த ஸ்டாலின் ஆட்சியில், சொல்லாததையும் செய்வோம் என்று காட்டி இருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, உலகத்திற்கே கோவையைத் தெரியும் என்றால், அதற்குக் காரணம் அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு அவர்கள்! அவரின் இந்தக் கோவை மண்ணில், உலகத்தரத்தில் பிரம்மாண்ட நூலகத்தை அறிவியல் மையமாக திராவிட மாடல் அரசு கோவையில் அமைக்கப் போகிறது! இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் பயனடையவேண்டும் என்று பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், இவ்வளவு செய்கிறோம்! என்றால், நம்முடைய இந்தியா கூட்டணி அரசு அமையும்போது, எவ்வளவு செய்ய முடியும்! என்று நினைத்துப் பாருங்கள்! அதற்கு முன்னோட்டமாக, தி.மு.க. சார்பில் என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறோம். அதில் தலைப்புச் செய்திகளை மட்டும் சொல்கிறேன்.

வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவை!

பொள்ளாச்சி இளநீருக்கும் மற்றும் தேங்காய்க்கும் புவிசார் குறியீடு!

பொள்ளாச்சியில் குளிர்பதனக் கிடங்கு!

பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைப்பு!

சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!

கோவை மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு!

மேட்டுப்பாளையம் – சத்தியமங்கலம் – கோபிசெட்டிபாளையம் – ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம்!

மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!

அதுமட்டுமல்ல! பத்தாண்டுகளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!

கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்கள் இனி 150 நாட்களாக உயர்வு! ஒரு நாள் ஊதியமாக 400 ரூபாய்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

இதையெல்லாம் இந்தியா கூட்டணி ஆட்சியில் வலியுறுத்தி நிறைவேற்றி, “தி.மு.க. சொன்னதைச் செய்யும்” என்று மீண்டும் நிரூபிப்போம்! இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?

பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது! கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது! இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள்! பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்!

அதுமட்டுமல்ல வங்கதேசம் கூட பா.ஜ.க. அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது! இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே! தி.மு.க. தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே! எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது! இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள்! இதுதான் கோவைக்கான பா.ஜ.க.வின் போலிப் பாசம்! எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பா.ஜ.க. தான்!

எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது!

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி “கோவை வேண்டாம்” – “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், “வேண்டாம் மோடி” இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி” தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும்! தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்!

பா.ஜ.க.கூட்டணியையும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! நன்றி! வணக்கம்! என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Rahul Gandhi: தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவு..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “இந்தியாவில் சிந்தாந்தப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மோடி அரசு இப்போது வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோடி அரசு என்று சொன்னாலும், உண்மையில் இது அதானியின் அரசு. காரணம் மோடி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு தந்துவிட்டார்.

அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையத்தை வேறு ஒருவரிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுத்துவிட்டார். அதானி எதை விரும்பினாலும், மோடி அவருக்கு அதை எளிதாக வாங்கி கொடுத்துவிடுவார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எனது எம்.பி பதவி, நான் தங்கி இருந்த வீடு என அனைத்தையும் பறித்தார்கள். அந்த வீடு போனது பற்றிக் கவலை இல்லை. காரணம், நாடு முழுவதும் எனக்கு உங்கள் இதயங்களில் இடம் இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் எனக்காக வீட்டுக் கதவை திறந்து வைப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவாகும்.

ஏன் தமிழ் மொழி, பண்பாடு, வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற, பல நிறுவனங்களை ED, IT போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி, பணம் பெற்றுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மோடிதான் இதனை செய்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒப்பந்ததைக் கொடுத்து, ரூ.1,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெறுகிறது. மோடி செய்த ஊழலில் இது சிறு பகுதிதான். இந்த ஊழலை செய்துவிட்டு மோடி தன்னை சுத்தமானவர் என்று அழைத்துக் கொள்கிறார்.

மோடி ஆட்சியில், 22 பெரும் பணக்காரர்கள் 70 கோடி மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளுக்கு ஊதியம் தந்திருக்கலாம்.

கல்வி வழங்கும் பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக, அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில், தேர்தல் ஆணையத்தில், நீதித்துறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனை உடனடியாக தடுத்தாக வேண்டும்.

சமூக நீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுப்போம். இந்தியாவில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்பின்மையை முற்றிலும் நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொள்வோம்! கோவையில் வீசும் காற்று, விரைவில் புயலாக மாறும். அந்தபுயல் அதானிகளை, மோடிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எரியும்!” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Maharashtra: நீண்ட இழுபறிக்கு பிறகு ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு வெற்றி..! சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்து…!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் ஆகமொத்தம் 5 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுகிறது.

சர்ச்சைக்குரிய சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், பிவாண்டி தொகுதியை காங்கிரஸ் எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், சிவ சேனாவின் பாரம்பரிய தொகுதியான மும்பை வடக்கு, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நேற்று எழுதியுள்ளார். அதில், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மிக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியை தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாக பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-ல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவதை காண்கிறேன்.

அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மை செயலாளர் – மாநாடுகளை சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.

எனினும், இளைஞரணியின் 25-ம் ஆண்டினையொட்டி 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாக கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்பு கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.