இந்தியாவில் நேரடி வரிவசூலில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 182% அதிகரிப்பு..!

இந்தியாவின் நேரடி வரிவசூல் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த நிதியாண்டில் 182% அதிகரித்து உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்பு 2023-24ம் நிதியாண்டில் 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகளவு என வருமான வரித்துறை கூறியுள்ளது.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் இரு மடங்காக உயர்ந்து 9 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், தனிநபர் வருமான வரிவசூல் நான்கு மடங்கு உயர்ந்து 10.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-15-ஆம் நிதியாண்டில் மொத்த நேரடி வரிவசூல் 6.96 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் 4.29 லட்சம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வரிவசூல் 2.66 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15 நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 8 கோடியே 61லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 2014-15-ஆம் நிதியாண்டில் 5.70 கோடியாக இருந்த வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 10.41 கோடியாக உயர்ந்து இருந்தாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

STALIN: தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிகும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28-ஆம் தேதி சென்றடைந்தார்.

ஆகஸ்ட் 29- ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், நோக்கியா, பேபால், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 30- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் குபெர்டினோவில் ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழகத்தில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ள ஆல்பாபெட் அதாவது கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கை: இந்தியாவில் விற்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்..!

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன. இவை 0.1 எம்.எம் முதல் 5 எம்.எம் அளவில் காணப்படுகின்றன.

உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன. இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும். பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அந்த ஆய்வு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வால் கூறுகையில், “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்’’ என தெரிவித்தார்.

கருணாநிதியின் புகழஞ்சலியில் மு.க. ஸ்டாலின்…. “இந்தியா”க்கு பாதை அமைத்ததே தமிழகம்..

2024 தேர்தல் இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? இருக்கக்கூடாதா..? என்பதற்கான தேர்தல் என கருணாநிதிக்கு எழுதிய புகழஞ்சலியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவர் எழுதியுதில்,
“வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில்
தமிழ்த்தாயின் தலைமகன்
பேரறிஞர் அண்ணாவுக்கு பக்கத்தில்
கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே!
நூற்றாண்டு விழா நாயகரே!
தந்தையே!
உங்களைக் காண ஆகஸ்டு 7
அதிகாலையில் அணி வகுத்து வருகிறோம்!

உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு
வருகிறேன்…
“உங்கள் கனவுகளை எல்லாம்
நிறைவேற்றி வருகிறோம் தலைவரே!” –
என்பதுதான் அந்த நல்ல செய்தி!

நீங்கள் இருந்து செய்யவேண்டியத் தான்
நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

“பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன்;
மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்’ என்றார்
காலம் வழங்கிய
இரண்டாவது வள்ளுவன் எம் அண்ணா.
95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள்.
இனம் – மொழி – நாடு காக்க
ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள்.
உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான்
இந்த நவீன தமிழ்நாடு.

நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை
இடையில் புகுந்த
கொத்தடிமைக் கூட்டம் சிதைத்தன் விளைவாக –
தாழ்வுற்றது தமிழ்நாடு.
தாழ்வுள்ள தமிழ்நாட்டை மீட்டெடுத்து
மீண்டும் உங்கள் ஆட்சி காலத் தமிழ்நாடாக
உருவாக்கி வளர்த்தெடுக்க
எந்நாளும் உழைத்து வருகிறேன்.

“ஸ்டாலின் என்றால் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு”
என்றீர்கள்.
அந்த கரகரக் குரல் தான்,
கண்டிப்புக் குரலாக என்னை உழைக்க வைத்துக்
கொண்டிருக்கிறது.

“எனக்குப் பின்னால்,
இனமானப் பேராசிரியருக்குப் பின்னால்
யாரென்று கேட்டால்
இங்கே அமர்ந்திருக்கும் ஸ்டாலின்” என்று
எந்த நம்பிக்கை வைத்து சொன்னீர்களோ
அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக்
கொண்டிருக்கிறேன்.

எட்டுக் கோடித் தமிழ் மக்களும் ஏதாவது
ஒருவகையில் பயனடையும் திட்டத்தத் தீட்டி
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை
தித்திக்கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம்.

ஒற்றைக் கையெழுத்து போட்டால்
அது கோடிக்கணக்கானவர்களை
மகிழ்விக்கிறது.
ஒரே ஒரு உத்தரவு
இலட்சக்கணக்கானவர்களை இரட்சிக்கிறது.
தமிழ்நாடு தலை நிமிர்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த மாநிலமான உயர்கிறது.
உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது,
தலைவரே!

நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைத் தான்
நாம் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதற்கு இடையில் –
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாய்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது.
இந்தக் கட்சி ஆட்சியா?
அந்தக் கட்சி ஆட்சியா? – என்பதற்கான விடையல்ல
இந்த தேர்தல்.
இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டுமா?
இருக்க முடியாதா? – என்பதற்கான தேர்தக் இது.

நீங்கள் சொல்வீர்களே –
“தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று
இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்’ – என்று!
அப்படித் தான் INDIA-வுக்கான குரலை எழுப்பத்
தொடங்கி இருக்கிறோம்!

அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.
INDIA-வுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு.
இந்து இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

சுயமரியாதை –
சமூக நீதி –
சமதர்மம் –
மொழி, இன உரிமை –
மாநில சுயாட்சி –
கூட்டாட்சி இந்தியா – என்ற எங்களாது விரிந்த
கனவுகளை
இந்தியா முழுமைக்கும் அகலமாக விரித்துள்ளோம்.

திமுக மாநிலக் கட்சி தான்!
அனைத்து மாநிலங்களுக்கும்
உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக
இருக்க வேண்டும் என்ற
உங்களது அந்தக் கனவும் நிறைவேறப் போகும்
காலம்..
வரும் காலம்!

உங்கள் நூற்றாண்டு –
உங்களாது கனவுகளை நிறைவேற்றி தரும் ஆண்டு.

நீங்கள் உருவாக்கி
நவீன தமிழ்நாட்டை
நீங்களே ஆள்கிறீர்கள்!
நீங்களே வாழ்கிறீர்கள்!
நீங்களே வழிநடத்துகிறீர்கள்!
உங்கள் வழி நடக்கும்
எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்!
வென்று வந்து காலடியில் அதனை வைக்கின்றோம்
தலைவரே!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

செல்லூர் ராஜூ பதிலடி அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி..!

இந்தியாவில் பாஜக வளர்வதற்கு முன்பே இந்துத்துவா கொள்கைகளை சுமந்து, யாத்திரைகள் மூலம் இந்துக்களை ஒன்றிணைத்த மிகப்பெரிய கட்சி சிவசேனா. பல் தாக்கரே மறைவிற்கு பின்னர் பாஜக குடைச்சல் கொடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பல வெறுப்பு அரசியலை சம்மதித்து வைத்துள்ளது. இனி வடக்கே பாஜக பருப்பு வேகாது என்ற நிலை ஏற்பட தெற்கே கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரே நேரத்தில் மறைத்ததால் நாம் சென்று ஓட்டு வங்கியை வளர்த்து கொள்ளலாம் என்ற பேராசையில் தமிழகத்தில் வட்டமிட தொடங்கியது.

இந்நிலையில், வரும் நாடளும்மான்ற தேர்தலில் இரண்டு இலக்கங்களில் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பாஜக நகர்வுகளை நகர்த்துகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி இருந்தாலும். இரு கட்சிகளுக்கிடையே உரசல்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுக்கும். இந்நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. முடிவு வெறும் முடிவாகவே இருக்க யதார்த்தத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சி தலைவர்களே பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தபோது அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். இது பாஜக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் ஒருவர் மட்டுமே கூட்டணி கட்சியான பாஜகவின் யாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்க அனுப்பி வைத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே அதிமுக மாநாட்டுக்காக ரிக்ஷா பேரணியை செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை எங்களுக்கு “Just like” அவ்வளவு தான்! எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என பேசினார்.

செல்லூர் ராஜூ பற்றி பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் சேர்ந்து ஓராண்டிலேயே தலைவரான அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவினர் மீது துரும்பை எறிந்தால் கூட பதிலுக்கு இரும்பை வீசுவோம் என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு: பாவம் செய்ததை போக்க அண்ணாமலை நடைபயணம்…!

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தங்கசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் பணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 40 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல்காந்தி நடை பயணம் செய்தது இந்தியாவை மீட்டெடுக்க.

அண்ணாமலை நடைபயணம் செய்வது அவரை முன்னிலைப்படுத்த தான். ஆட்சி மூலமும், கட்சி மூலமும் பல்வேறு நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப்படுகிறது. திமுக எந்த பாவமும் செய்யாததால் நடை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

”பாஜக ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான்..! கவுண்ட் டவுன் சொன்ன மு.க. ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான IRS அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.” என தெரிவித்தார்.

பிரதமர் மோடியை நேரில் மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே போய் பாருங்க

மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை மணிப்பூருக்கு செல்லுங்கள் என பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும்.  மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள் எரிகின்றன. ஆனால் நீங்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மிசோரம், மணிப்பூர், நாகாலாந்தில் யாருடைய அரசு இருக்கிறது? இந்த மாநிலங்களில் உங்கள் அரசுதான் ஆட்சியில் உள்ளது.

ஆகையால் நீங்கள் இந்த மாநிலங்களுக்கு செல்லத்தான் வேண்டும். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. “இந்தியா” கூட்டணியின் குழு மணிப்பூர் செல்ல இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தை எதிர்கொள்வது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக சதி செய்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர்கள் இந்த சட்டசபையில் அமர்ந்துள்ளனர். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார். மேலும் தாம் மணிப்பூர் மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் மணிப்பூர் மாநில நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். மணிப்பூருக்கு நாளை செல்லும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் உட்பட 2 பேர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடனை திரும்ப செலுத்தாததால்.. கணவன் கண் முன்னே மனைவியை பலாத்காரம்…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பல நேரங்களில் ஆண்கள் தங்கள் ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டவும் கூட பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 47 வயதான ஒருவர் கந்துவட்டி தொழிலைச் செய்து வருகிறார். அவரிடம் இருந்து கடன் வாங்கிய ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கொடூரன் கடன் வாங்கிய அந்த நபரின் மனைவியைப் பலாத்காரம் செய்துள்ளான். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த கொடூரம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது வேடிக்கையான விஷயமாகும்.

இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட அந்த குற்றவாளியைக் காவல்துறை கைது செய்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில், அதாவது அந்த பெண்ணின் கணவர் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும், அதனை அவர் திரும்பச் செலுத்தத் தவறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டிக்காரன், கடன் வாங்கிய நபரைக் கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

மேலும், அவர் கண் முன்னாலேயே அவரது மனைவியைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அது மட்டுமின்றி இந்த கொடூரத்தை அவன் தனது மொபைலில் ரெக்கார்டும் செய்து வைத்துள்ளான். அதன் ஒரு பகுதியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளான். அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவை ஸ்டிக்கராக மட்டும் பார்க்கும் அதிமுக..!

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ”அண்ணாவைத் தங்கள் கட்சிக்கு ஒட்டும் லேபிளாக, கொடியில் ஒரு ஸ்டிக்கராக வைத்துக் கொண்டு, அவரது கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டு வருபவர்கள் யார் என்பது உடன்பிறப்புகளான உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.’

”அவர்கள் அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, தங்கள் கட்சியை உருவாக்கிய தலைவரின் நூற்றாண்டைக் கூட மறந்துபோய், ஓராண்டு கழித்து திடீரென நினைவுக்கு வந்து, பெயரளவுக்குச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட இடங்களுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை வைத்து அவரது நூற்றாண்டை முடித்துவிட்டார்கள்.”

”அவர்கள் இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்து மறைந்த நாவலர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடியது தி.மு.கழகம்தான். நாவலருக்குச் சிலை அமைத்ததும் கழக அரசுதான்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”

”’ஏ, தாழ்ந்த தமிழகமே!’ என வேதனையோடு பேரறிஞர் அண்ணா சொன்ன காலம் ஒன்று உண்டு. திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையால், அதன் அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் அளித்த வெற்றியால், கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும்.”