திருமாவளவன்: இசைவாணி பிரச்சினை அதானி விவகாரத்தை திசை திருப்ப..!

அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி இல்லை எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த ஒரு முன்மொழிவும் வரவில்லை என மத்திய பாஜக அரசு மறுதலித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடரில் அதானி பிரச்சினை, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சினை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. பாஜகவால் கொண்டு வரப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடிக்க முயற்சிப்போம். இதற்கான செயல்திட்டங்களை இண்டியா கூட்டணி கட்சியினர் வரையறுப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் இடையேயான விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசு அதை பார்த்துக் கொள்ளும். மதத்தையோ, மத உணர்வையோ காயப்படுத்தும் நோக்கில் இசைவாணி பாடவில்லை. அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இது ஏற்புடையதல்ல. இசைவாணியை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது கண்டனத்துக்குரியது” என திருமாவளவன் தெரிவித்தார்.

பி. கே. சேகர்பாபு: தவறு இருப்பின் இசைவாணி மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்..!

‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் இசைவாணி, ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடினார்.

இந்தப் பாடல் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக கானா பாடகர் இசைவாணி மீது மதுரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பி. கே. சேகர்பாபு அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்த ஆட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்கமாட்டார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நான் பத்திரிகைகள் மூலமாக அறிந்து கொண்டேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவு படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

“ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற கானா பாடலால் இசைவாணிக்கு கொலை மிரட்டல்..!

“ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற கானா பாடலை பாடிய இசைவாணிக்கு பல்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு “ஐ ஆம் சாரி ஐயப்பா”என்ற பாடலை பாடி இருந்தார். மேலும் “ஐ ஆம் சாரி ஐயப்பா”என்ற பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார். இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையுமாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடிவருவதாகவும், இதைப்போன்று கடந்த 2019-ஆம் ஆண்டு “ஐ ஆம் சாரி ஐயப்பா” பாடல்களை பாடியதாகவும், அந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. மேலும் தன்னை அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகின்றனர்.

அத்துடன், பாடல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதனால், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், சமூக விரோதிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளேன். எனவே, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டு, மிரட்டல் வந்த எண்களையும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இயக்குனர் ரஞ்சித்- கானா பாடகி இசைவாணி மீது ஐயப்ப பக்தர்கள் புகார்..!

கானா பாடகி இசைவாணி “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருந்தார். அந்த “ஐ ஆம் சாரி ஐயப்பா” பாடல் ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அந்த புகார் மனுவில், இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பா ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் மார்கழியில் மக்கள் இசை என்கிற இசை நிகழ்ச்சியில் இசைவாணி “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற பாடலை பாடி இருக்கிறார்.