கன்னியாகுமரியில் நடந்த RSS ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக, பாஜக இடையே கூட்டணி உடைந்து, தற்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி, மாறி விமர்சித்து வரும் நிலையில், சமீபத்தில் நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் RSS சார்பில், ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், RSS ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், RSS ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த வந்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம். தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ள தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக தளவாய்சுந்தரத்தை மையப்படுத்தி அதிமுக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக, மாறுபட்ட வகையில் செயல்பட்டதாகவும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆகவே கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தளவாய்சுந்தரம், தான் வகித்து வரும் அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.