உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், லக்கிம்பூர் படுகொலைகளை விவகாரத்தில் நியாயம் கேட்டு தொடர்ந்து வருண் காந்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘போராடும் விவசாயிகளை ‘காலிஸ்தானி’ என்று அழைப்பது, நமது எல்லைகளில் போராடி ரத்தம் சிந்திய இந்த பெருமைமிக்க மகன்களின் தலைமுறையினருக்கு அவமதிப்பு மட்டுமல்ல, இது தேசிய ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானதும் ஆகும். இது தவறான எதிர்வினைகளையும் ஏற்படுத்தும்’ என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், ‘லகிம்பூர் கேரி விவகாரத்தை இந்து-சீக்கியர் இடையேயான போராட்டமாக மாற்ற முயற்சி நடக்கிறது. இது ஒழுக்கக்கேடானது மட்டுமின்றி தவறானதும் ஆகும். ஒரு தலைமுறை மறக்க நினைக்கும் காயங்களை மீண்டும் கிளறுவதும் ஆகும்’ என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஏழை விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுவதற்கு எந்த மத அர்த்தங்களும் கிடையாது எனவும் வருண் காந்தி அதில் காட்டமாக கூறியுள்ளார்.