வங்கி வாடிக்கையாளர்களிடம் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..!

சென்னையில் அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, வங்கி சேவைகள் அனைத்தும் மின்னணுமயம் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் தெரிவித்தார்.

மேலும் அதிகாரிகள், ஊழியர்களின் சிறப்பான பணியால் இந்தியன் வங்கி ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி, 2021-22-ம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி என படிப்படியாக லாபம் அதிகரித்து தற்போது ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.2,400 கோடி லாபம் ஈட்டியுள்ளது. சிறுசேமிப்பு டெபாசிட்வளர்ச்சியிலும் முதல் இடத்தில் உள்ளது. இதற்காக, நமது வங்கியின் 40 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதை பூர்த்தி செய்யும் வகையில் சேவை வழங்க வேண்டியது அவசியம். மியூச்சுவல் ஃபண்ட், பங்குசந்தைகளில் நல்ல லாபம் கிடைப்பதால் இளம் தலைமுறையினர் அவற்றில் அதிகம் முதலீடு செய்கின்றனர். இதனால், வங்கி டெபாசிட்துறை கடும் சவாலை சந்திக்கும் வகையில் உள்ளது. இதேபோல, கடன் சந்தையிலும் பல சவால்கள் உள்ளன.

வங்கி சேவைகள் அனைத்தும்மின்னணுமயம் ஆக்கப்பட்டுவிட்டன. அதே நேரம், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சவால்களை சமாளிக்க, வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மொபைல் வங்கி சேவையை பிரபலப்படுத்த வேண்டும். வாடிக்கையாளருடன் நல்லுறவை வளர்க்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதேபோல, ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாங்கள் எடுத்துள்ள காப்பீடுகளுக்கு அதிக பணம் பிரீமியமாக செலுத்த வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சாந்திலால் ஜெயின் தெரிவித்தார்.