மின் இணைப்பு மனுவை பரிசீலிக்க ரூ.3,500 லஞ்சம்.. ஓராண்டு சிறை தண்டனை

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு கடந்த 2013-ல் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் எம்ஜிஆர் நகர் பிரிவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் விஜயகுமார் மனுவை பரிசீலனை செய்ய ரூ.3,500 தந்தால் வேலை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 2013 ஜூன் 6ம் தேதி லஞ்சம் கேட்ட விஜயகுமார் மீது ஊழல் தடுப்பு பிரிவில் ஜெயபால் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஜெயபால் லஞ்ச பணம் ரூ.3,500-யை விஜயகுமாரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் விஜயகுமாருக்கு ஓராண்டு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.